உத்தமர்கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

உத்தமர்கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.

Update: 2023-05-14 20:01 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் புருஷோத்தம பெருமாளுக்கு தேரோட்டமும், வைகாசியில் பிச்சாண்டேஸ்வரருக்கு தேரோட்டமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவில் திருப்பணி மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. மேலும் தேர் பழுதானதால் திருவிழாவின்போது சகடை தேரில் சாமி வலம் வந்தது. இந்நிலையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரரின் ஏற்பாட்டில் புதிய தேர் கட்டும் பணி நடைபெற்று முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்யாகவாஜனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தேரில் கடம் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் இழுத்து வந்தனர். இதையடுத்து தேர் நிலையை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்