வியாபாரியை சிக்கவைக்க மளிகைக்கடையில் சாராயத்தை வைத்த மர்மநபர்

கச்சிராயப்பாளையம் வியாபாரியை சிக்கவைக்க மளிகைக்கடையில் சாராயத்தை வைத்துவிட்டு போலீசில் புகார் அளித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-10 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மளிகைக்கடை உள்ளது. இந்த கடையில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு ஒருவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், குறிப்பட்ட அந்த மளிகைக்கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையின் முன்புற கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டையின் இடையே லாரி டியூப் ஒன்றில் 30 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து அந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக மளிகைக்கடை உரிமையாளரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் சாராயத்தை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யவில்லை என்பது தெரிந்தது. மேலும் மளிகைக்கடை உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

தொழில்போட்டி

இதைநோட்ட மிட்ட மர்மநபர், மளிகைக்கடை உரிமையாளரை சாராய வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவரது கடையில் சாராயத்தை வைத்துவிட்டு சென்றது தெரிந்தது. தொழில் போட்டி காரணமாக மர்மநபர், இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். இதையடுத்து மளிகைக்கடை உரிமையாளரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சாராயத்தை கடையில் பதுக்கி வைத்துவிட்டு மளிகைக்கடைக்காரர் சாராயம் விற்பனை செய்து வருவதாக கூறி செல்போனில் தவறான புகார் அளித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்