பச்சிளம் குழந்தையை பஸ்சில் விட்டுச்சென்ற தாய்

செம்பட்டியில் பஸ்சில் பச்சிளம் குழந்தையை விட்டுச்சென்ற தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-06 19:45 GMT

பையில் குழந்தை


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து செம்பட்டி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதில், பெரியகுளம் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்த வேலுமணி (வயது 40) என்ற பெண்ணும் வந்து கொண்டிருந்தார். வத்தலக்குண்டுவில் இருந்து பஸ் புறப்படும் போது, வேலுமணியின் பக்கத்து இருக்கையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண், கையில் துணி பையுடன் அமர்ந்திருந்தார்.


இந்தநிலையில் அந்த பஸ் செம்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது வேலுமணியின் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண், கையில் வைத்திருந்த துணி பையை இருக்கையில் வைத்துவிட்டு பஸ்சை விட்டு இறங்கி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதற்கிடையே அவர் விட்டுச்சென்ற துணி பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலுமணி, துணி பையை திறந்து பார்த்தார். அதனுள் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.


தாய்க்கு வலைவீச்சு


இதையடுத்து குழந்தையை விட்டுச்சென்ற இளம்பெண்ணை பஸ் நிலையம் முழுவதும் வேலுமணி தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் வேலுமணி, செம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் நாராயணனிடம் குழந்தையை இளம்பெண் விட்டுச்சென்றது குறித்து கூறினார். மேலும் குழந்தையையும் போலீசில் ஒப்படைத்தார்.


இதையடுத்து போலீசார் ஆத்தூர் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு வந்த சமூகநலத்துறை அதிகாரிகள், இளம்பெண் விட்டுச்சென்ற குழந்தையை பெற்றுக்கொண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர்.


இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை விட்டுச்சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாயை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்