உணவு பொருட்களின் தரத்தை அறியும் நடமாடும் பரிசோதனை கூடம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாதம் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பொருட்களின் தரத்தை அறியும் நடமாடும் பரிசோதனை கூடத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-06 19:45 GMT

நடமாடும் பரிசோதனை கூடம்


இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் தமிழகத்துக்கு 2 நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் வழங்கப்பட்டன. அதில் ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் ஒரு மாதம் பல்வேறு இடங்களில் சென்று உணவு பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி, திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது.


இதில் கலெக்டர் விசாகன் கொடியசைத்து நடமாடும் உணவு பரிசோதனை கூட வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்களை கலெக்டர் பார்வையிட்டார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன், மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் உள்ளிட்ட அலுவலர்கள், உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


பரிசோதனை


இந்த வாகனம் மூலம் பொதுமக்கள், வணிகர்கள், மாணவ-மாணவிகளுக்கு உணவின் தரம், பாதுகாப்பு, காலாவதி தேதி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பால், நெய், எண்ணெய், தேயிலை, மிளகாய்த்தூள், பொரித்த கோழி இறைச்சி, பருப்பு வகைகள், மிளகு, குடிநீர், வெல்லம், குளிர்பானம் உள்ளிட்ட உணவு பொருட்கள் பரிசோதனை செய்து உடனுக்குடன் அறிக்கை வழங்கப்படும்.


எனவே பொதுமக்கள், வணிகர்கள் உணவு பொருட்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் தரமற்ற, கலப்படம், காலாவதியான உணவுகள் என தெரியவந்தால், அதுபற்றி உணவு பாதுகாப்பு அலுவலகத்தை 94440 42322 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்