பணகுடியில் வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம்; சபாநாயகர் அப்பாவு நிதி உதவி
பணகுடியில் வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம் அடைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சபாநாயகர் அப்பாவு நிதி உதவி வழங்கினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அன்னை நகரை சேர்ந்தவர் சிலுவை அந்தோணி (வயது 37). இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் அன்று உவரி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தனர். அதற்குள் வீட்டில் உள்ள மரக்கட்டில், பீரோ, பத்திரம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி விட்டது.
இதனை அறிந்த சபாநாயகர் அப்பாவு நேற்று சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார். மேலும் இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பேசி இலவச வீடு பெற்று தருவதாக உறுதி அளித்தார்.
பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், பேரூராட்சி துணை தலைவர் புஷ்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.