மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுவினர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்

மாமல்லபுரம் வருகை தந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் குழுவினர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

Update: 2023-05-19 09:31 GMT

மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை தலைமையில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், அரியானா மாநிலங்களை சே்ாந்த நிலைக்குழு எம்.பி.க்கள் குழுவினர் 8 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த எம்.பி.க்கள் குழுவினரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் சங்கு மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றி குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை எம்.பிக்கள் குழுவினர் ரசித்து பார்த்தனர்.

கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டனர். மேலும் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர்கள் அங்கு குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்களுடன் மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வந்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்