காதல் கணவரால் கஞ்சா வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போன பட்டதாரி பெண்
சென்னையில் தனது காதல் கணவரால் கஞ்சா வழக்கில் சிக்கி பட்டதாரி பெண் ஒருவர் ஜெயிலுக்கு போனார். அவரது வாழ்க்கையும் தடம் புரண்டு போனது.
சென்னை,
காதல் என்பது புனிதமானது. ஆனால் அந்த காதல் மூலம் தேர்வு செய்யும் வாழ்க்கை சிலரை உச்சத்தில் கொண்டு செல்கிறது. சிலர் அதனால் வாழ்க்கையில் தடம் புரண்டும் போகிறார்கள். அதுபோல் ஒரு பெண் தனது காதல் கணவரால், கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டார்.
அவரது பெயர் ஜெகருன்னிஷா (வயது 22). சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்தார், ஜெகருன்னிஷா. ஆனால் அடுத்து அவர் தேர்ந்தெடுத்த காதல் வாழ்க்கை அவரை தடம் புரள வைத்து விட்டது. அவர் முதலில் செய்த காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதன் மூலம் அவருக்கு ஒரு குழந்தை பரிசாக கிடைத்தது. 2-வதாக அவர் முகமது ரபி என்ற மிட்டாய் ரபி (22) என்பவரை காதலித்து மணந்தார். இந்த வாழ்க்கையும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
கஞ்சா வழக்கில் சிக்கினார்
ஜெகருன்னிஷா எந்த வழக்கிலும் சிக்காதவர். அவர் தனக்கு 2-வதாக தேர்வு செய்த காதல் கணவர் மிட்டாய் ரபி ரவுடி ஆவார். அவர் 3 கொலை முயற்சி வழக்குகள், 2 கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கு போனவர். அவரால் ஜெகருன்னிஷாவும் கஞ்சா வழக்கில் மாட்டினார். கணவர் செய்த தொழிலை அவரும் கையில் எடுத்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மிட்டாய் ரபியையும், ஜெகருன்னிஷாவையும், உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் ஷேட்டு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஜெகருன்னிஷா 1.2 கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் மாட்டினார். மிட்டாய் ரபி தப்பி ஓடிவிட்டார். ஷேட்டு தலைமையிலான தனிப்படை போலீசார் மிட்டாய் ரபியையும் பின்னர் பிடித்துவிட்டனர். முதலில் ஜெகருன்னிஷா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு, மிட்டாய் ரபியும் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீசார் தெரிவித்தனர்.