மூங்கில்துறைப்பட்டை மையமாகக் கொண்டு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்
மூங்கில்துறைப்பட்டை மையமாகக் கொண்டு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கோரிக்கை
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மூங்கில்துறைப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லை பகுதியாக உள்ள இங்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் ஆகியவற்றுடன் நாளுக்கு நாள் வளர்ந்து வரும்பகுதியாக உள்ளது. மேலும் மூங்கில்துறைப்பட்டை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி அல்லது 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு சென்று வர வேண்டும்.
இந்த நிலையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ரிஷிவந்தியம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தற்காலிகமாக அரியலூரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. தற்போது ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தில் கல்லூரிக்கு புதியதாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே திருக்கோவிலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அரும்பாக்கத்தில் கட்டப்படுகிறது. இதனால் மேற்கண்ட 2 கிராமங்களுக்கு இடையே 10 கிலோமீட்டர் தூரம் என்பதால் அருகருகே கல்லூரி அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பாவந்தூருக்கு சென்று வர 42 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் இவ்வளவு தூரம் சென்று மாணவர்கள் படித்து வருவார்களா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுகிறது. அடிக்கடி பஸ் வசதி இருக்கும் இடங்களில் கல்லூரி அமைந்தால் நன்றாக இருக்கும். மாறாக பஸ் வசதியே இல்லாத இடத்தில் கல்லூரி கட்டப்படுவதால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து அங்கு சென்று படிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே மூங்கில்துறைப்பட்டை மையமாகக் கொண்டு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.