வேறொருவரை மணந்த காதலி; நியாயம் கேட்க வீட்டுக்குள் ஏறி குதித்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மலேசியாவிலிருந்த காதலனுடன் போனில் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துவிட்டார். நண்பர்கள் மூலம் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்து, இளைஞர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Update: 2022-08-10 08:17 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவைத் தொடர்ந்து அன்றிரவு கலை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கிராம மக்கள் அங்குக் கூடியிருக்க... திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க ஆரணி நகரப் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில், சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை கண்காணித்தனர். அவரை பின்தொடர்ந்து சென்றபோது, அவர் ஒரு வீட்டின் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு சுவர் ஏறி உள்ளே குதித்தார்.

பின்தொடர்ந்த போலீசாரும் வீட்டுக்குள் தாவி அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். 'திருடனாக இருக்குமோ?' என்ற சந்தேகத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றும் விசாரித்தனர். அது தான் இல்லை. தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை மணந்த காதலியைச் சந்தித்து நியாயம் கேட்பதற்காக வீட்டுக்குள் குதித்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அந்த இளைஞர், போளூர் அருகிலிருக்கும் பொன்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 27 வயதாகும் அவரும், இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில், வேலையில் இருக்க வேண்டுமென அந்தப் பெண் கன்டிஷன் போடவே. இளைஞரும் மலேசியாவுக்கு சென்று கார்பெண்டர் வேலை செய்து வந்தார். ஓரளவு செட்டிலாகும் அளவுக்கு சம்பாதித்தப் பின்னரே ஊர்த் திரும்ப வேண்டுமென காதலி சொல்லிவிட்டதால், கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு தன் கிராமத்தைச் சேர்ந்த வேறு நபரை அந்த இளம் பெண் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்தின்பேரில், இத்திருமணம் நடந்திருக்கிறது.

இதையடுத்து, மலேசியாவிலிருந்த காதலனுடன் போனில் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துவிட்டார். நண்பர்கள் மூலம் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்து, இளைஞர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனடியாக மலேசியாவிலிருந்து சொந்த ஊர் திரும்பினார். தன்னை ஏமாற்றிய காதலியை சந்தித்து நியாயம் கேட்க பலமுறை முயன்றிருக்கிறார். சரியான நேரம் கிடைக்காததால், அவர்களால் சந்தித்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான் திருவிழா நேரத்தில், காதலியின் ஊருக்குள் வந்திருக்கிறார். போனில் பேசிவிட்டு, அவரின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்தபோது, போலீசாரிடம் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

போலீசார், இளைஞரின் தந்தையை காவல் நிலையம் வரவழைத்து நடந்ததைக் கூறி எச்சரித்தனர். எழுதி வாங்கிக்கொண்டு இளைஞரைவீட்டுக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்!

Tags:    

மேலும் செய்திகள்