தகரக்கொட்டகையில் செயல்படும் தீயணைப்பு நிலையம்
கூடலூரில் தகரக்கொட்டகையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
தீ... அது பற்றி எரிந்தால் காட்டையே எரித்து விடும். இதனால் ஏற்படும் சேதம் மனிதர்களை மட்டுமின்றி வனவிலங்குகளையும் பாதிக்கிறது. தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களின் பங்கு இன்றியமையாதது. தகவல் கிடைத்த உடன் விரைந்து செயல்பட்டால் தான், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
தீயணைப்பு நிலையம்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர்.
கேரளா-கர்நாடகா மாநிலங்களை நீலகிரியுடன் இணைக்கும் பகுதியில் கூடலூர் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யக்கூடிய பகுதியாக விளங்குகிறது. மழை காலங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் மீட்பு பணிகளுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது.
தகரக்கொட்டகை
ஆண்டுதோறும் பருவமழை தீவிரமடையும் நாட்களில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மற்றும் மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். கூடலூரில் தகரக்கொட்டகையில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் தீயணைப்புத்துறையினருக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. தற்போது உள்ள இடம் நகராட்சி மற்றும் தனியார் நிலத்துடன் இணைந்து இருப்பதால் இன்றைய காலத்துக்கு ஏற்ப கட்டிடங்கள் கட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் தீயணைப்புத் துறை அலுவலகம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், வீரர்கள் அமரும் அறைகள் கட்டுவதற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
புதிய கட்டிடம்
40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக இடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அரசு நிலங்கள் வருவாய்த்துறையால் பல இடங்களில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் தீயணைப்பு நிலையம் செயல்படுவதற்கு ஏற்ற நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். கூடலூர் மட்டுமின்றி பந்தலூர் தாலுகா பகுதியில் இயற்கை பேரிடர் ஏதேனும் ஏற்பட்டால், தீயணைப்புத் துறையினர் விரைந்து செல்லும் வகையில் முக்கிய சாலையோரம் நிரந்தர இடம் வழங்க வேண்டும். அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.