குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை அடித்துக் கொன்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
மானூர்:
நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை அடித்துக் கொன்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலி தொழிலாளி
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவருடைய மகன் மகாராஜன் (24). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா.
மகாராஜன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் சங்கீதா கணவரிடம் கோபித்து கொண்டு ராஜவல்லிபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.
தந்தையிடம் தகராறு
அதன்பிறகு மகாராஜன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு பெற்றோரிடமும் தகராறு செய்து வந்தார். இதனை கண்டித்த தந்தை ஆறுமுகத்தையும் மகாராஜன் தாக்கினார்.
நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் மகாராஜன் மது குடித்து விட்டு வந்து, தந்தை ஆறுமுகத்திடம் தகராறு செய்தார். பின்னர் அவர் வீட்டில் தூங்கினார்.
கொலை
இதற்கிைடயே, மகன் மீது தீராத ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகம் நள்ளிரவில் இரும்பு கம்பியை எடுத்து வந்து, பெற்ற மகன் என்றும் பாராமல் தூங்கி கொண்டிருந்த மகாராஜனின் தலையில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மகாராஜன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ஆறுமுகம் தப்பி ஓடி விட்டார்.
தந்தைக்கு வலைவீச்சு
மகாராஜனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். மகாராஜன் கொலை செய்யப்பட்டது குறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறந்த மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். மகாராஜன் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மானூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.