பேரம் பேசிய தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
தண்டராம்பட்டு அருகே பேரம் பேசிய தகராறில் விவசாயியை கத்தியால் குத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜா, விவசாயி. இவர் இன்று வீட்டில் இருந்தபோது 4 சக்கர வாகனத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பார்த்தீபன் (வயது 35) என்பவர் தலையணைகளை விற்பனை செயய் வந்தார்.
அவரிடம் தலையணை வாங்குவதற்காக பேரம் பேசியபோது திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே வியாபாரி தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். ஆனாலும், ராஜா இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த பார்த்தீபன் திடீரென தனது வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் விவசாயியை சரமாரியாக வெட்டிய வியாபாரியை பொதுமக்கள் வாகனத்துடன் மடக்கி பிடித்து தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.