திருட்டுப்போன பசுமாட்டை கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்த விவசாயி

திருட்டுப்போன பசுமாட்டை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயி கன்றுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்தாா்.

Update: 2023-02-02 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச்சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 43), விவசாயி. இவருக்கு உலகலாம்பூண்டி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்குள்ள கொட்டகையில் ஏற்கனவே இருந்த பசு, கன்றுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பசு மாடுகளை கோவிந்தன் புதிதாக வாங்கி வந்து கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி இரவு, பசு மாடுகளுக்கும், கன்றுக்குட்டிக்கும் தீவனம் போட்டுச்சென்ற கோவிந்தன், மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஒரு பசுமாட்டை மட்டும் காணவில்லை. அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் பசு மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர், கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று கோவிந்தன், கன்றுக்குட்டியை ஆட்டோவில் வைத்து, தனது மனைவி சுபாஷினியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அந்த கன்றுக்குட்டியின் கழுத்தில், என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள் அய்யா என்ற வாசகம் அடங்கிய அட்டை தொங்க விடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து கோவிந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார். பசுமாட்டை காணவில்லை என்றுகூறி கன்றுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்த விவசாயியால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்