வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் வாகனங்கள் இன்றி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
விக்கிரவாண்டி,
பொங்கல் பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வந்த தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பஸ் மற்றும் கார்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பு கடந்த 13-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக சென்றன. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பரபரப்பாக காணப்பட்டது. வாகனங்களில் வெளியே செல்வதை தவிர்த்து பொங்கல் விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் வாகன போக்குவரத்து குறைந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. இதனால் கடந்த 3 நாட்களாக நின்றபடி பணியில் இருந்த போலீசார், சுங்கச்சாவடி பணியாளர்கள் சற்று ஓய்வாக அமர்ந்து பணியை கண்காணித்தனர்.