பஸ் வசதி இல்லாததால் மலை பாதையில் பள்ளிக்கு ஆபத்தான பயணம் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?

பஸ் வசதி இல்லாததால் மலை பாதையில் பள்ளிக்கு மாணவா்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.

Update: 2022-07-12 17:37 GMT


'கல்வியே நாட்டின் முதன் அரண்' என்பார்கள். ஆனால் அந்த கல்வியை கற்க இன்றும் எண்ணிலடங்கா மாணவர்கள் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு கல்வியை கற்க போராடி கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தகைய நிலைதான் கல்வராயன் மலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும்.

போராடும் மலைகிராம மாணவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிழக்கு தெடர்ச்சி மலை மீது அமைந்துள்ளது கல்வராயன் மலை. இங்கு எராளமான மலை கிராமங்கள் உள்ளன. பசுமை போர்த்திய போர்வையாக மலை இருந்தாலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வு மட்டும் இன்றும் பசுமை பெறவில்லை. அதில் ஒன்று அடிப்படை தேவையான கல்வி ஆகும்.

உலகில் கல்விதான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையில்லை. அதனால் தான் எத்தகைய போராட்டத்தையும் எதிர்கொண்டு கல்வி செல்வதை பெறுவதற்கு மலைகிராம மாணவர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் மலைகிராம மாணவர்கள்.

மலை பாதையில் ஆபத்தான பயணம்

அதாவது 'அறிவு ஒரு சுமை அன்று' என்பார்கள். ஆனால் இன்று இவர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை பார்த்தால், கல்வி அறிவு ஒரு சுமை தான் என்று மாறிவிடும் சூழல் நிலவுகிறது.

இதற்கு முக்கிய காரணம், சமவெளி பகுதியில் வசிக்கும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதை போன்று, இவர்களால் வந்து செல்ல முடியாத நிலை தான்.

குறிப்பிட்ட நேரத்தில் இவர்களுக்கான பஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல் இருக்கும் அதிகாரிகளே இவர்களது கல்விக்கு கேள்வி குறியை வைக்கிறார்கள்.

இதனால், மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கிடைக்கும் லாரி, சரக்கு வாகனம், டிராக்டர் என்று ஏதேனும் ஒரு வாகனத்தில் ஏறி செல்கிறார்கள். மலைபாதையில் இவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை பார்க்கையில் நமது நெஞ்சமும் கனக்கிறது. இத்தகைய இடர்களை கடந்து தான் இவர்கள் கல்வி பயில்கிறது.

70 கிராமத்தினர் பாதிப்பு

ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில் இவர்களது கல்வி முற்றிலும் முடங்கி விட்டது. சமவெளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. ஆனால் இவர்களது அத்தகையை கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது பள்ளி திறந்தபோதிலும், கல்வி கற்க செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது வேதனையின் உச்சமாகும்.

இதுகுறித்து மலைவாழ் பகுதி மாணவர்கள் கூறுகையில், கல்வராயன் மலை 171 கிராமங்கள் உள்ளது. மலைபகுதியில் மேல்நிலை பள்ளி இருந்தும், சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மலை அடிவாரத்தில் உள்ள மூலக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று தான் படித்து வருகிறோம். நாங்கள் பள்ளிக்கு சென்று வரும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் வசதிகள் இல்லை.

பஸ் வசதி தேவை

சேராப்பட்டில் இருந்து மூலக்காடு கிராமம் வழியாக சங்கராபுரத்திற்கு காலை 9 மணிக்கு அரசு பஸ் ஒன்று செல்கிறது. இந்த பஸ்சில் சென்றால் 10 மணிக்கு மேல் தான் மூலக்காடுக்கு செல்ல முடியும். எனவே இந்த பஸ்சில் நாங்கள் செல்ல முடிவதில்லை. ஆகையால், கிடைக்கும் வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த நிலை மாறுவதற்கு சேராப்பட்டில் இருந்து காலை 8 மணிக்கு பஸ்சை எடுத்தால் ஓரளவுக்கு குறித்த நேரத்தில் பஸ்சில் செல்ல முடியும். எனவே அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பஸ் நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கென்று தனியே பஸ் இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்