ராமேசுவரத்தில் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிக்கான கிரேன் கடலில் கவிழ்ந்ததால் பரபரப்பு

கடலில் விழுந்த கிரேனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-10 19:23 GMT

ராமேசுவரம்,

தமிழகத்திலேயே அதிகமான மீன்பிடி படகுகளை கொண்ட பகுதி ராமேசுவரம். இங்கு மீன்பிடி தொழிலை நம்பி மட்டும் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகம் கட்டப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் பல இடங்களில் சேதம் அடைந்து காட்சி தருவதுடன் அதிகமான படகுகளை நிறுத்த முடியாத ஒரு நிலையே உள்ளது.

இதனிடையே தற்போதுள்ள துறைமுகம் அருகிலேயே ரூ.20 கோடி நிதியில் மீன்வளத் துறை மூலம் புதிதாக மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. நேற்று இப்பணிக்கான உபகரணங்களை கொண்டு செல்வதற்காக கிரேன் ஒன்று துறைமுக பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த கிரேன் துறைமுகத்தில் இருந்து சரிந்து அதன் முன்பகுதி மட்டும் கடலுக்குள் விழுந்தது. மற்றொரு பகுதி துறைமுகத்தில் சிக்கி தொங்கியபடி கிடந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலில் விழுந்த கிரேனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்