கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

திருச்சியில் ரூ.1 கோடிக்கு மேல் கடன் இருந்ததால் தம்பதி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-09-17 18:08 GMT

பொன்மலைப்பட்டி, செப்.18-

திருச்சியில் ரூ.1 கோடிக்கு மேல் கடன் இருந்ததால் தம்பதி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 65). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயசித்ரா (60). இந்த தம்பதியின் மகள் சரண்யா. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

சேகர் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் அவர் பலரிடம் கடன் வாங்கி பங்கு சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தார். இதில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க தொடங்கினர். கடந்த ஒரு மாதமாக கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது.

கழுத்தை அறுத்துக்கொண்டனர்

இதனால் மனம் உடைந்த தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலையில் சேகரும், ஜெயசித்ராவும் நடைபயிற்சி செல்வதுபோல் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்மலை காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய ெரயில்வே குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்குள் சேகர், ஜெயசித்ரா ஆகியோர் சென்று கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் ஜெயசித்ரா தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டார். அதன் பின்னர் சேகர், அதே கத்தியை வாங்கி தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

108 ஆம்புலன்சுக்கு தகவல்

இதைத்தொடர்ந்து இருவரும் வலியால் அலறி துடித்தனர். வலி தாங்க முடியாமல் சேகர் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, தகவலை கூறி தங்களை காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெயசித்ராவையும், சேகரையும் மீட்டு பொன்மலை ெரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இருவரையும் பரிசோதனை செய்தனர்.

மனைவி சாவு

இதில் ஜெயசித்ரா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. சேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிசிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி இருவரும் தங்களது கழுத்தை தாங்களே அறுத்துக்கொண்டார்களா? அல்லது ஜெயசித்ராவின் கழுத்தை சேகர் அறுத்து கொலை செய்து விட்டு, பின்னர் அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்துவட்டி கேட்டு தொந்தரவா?

மேலும் கடன் கொடுத்தவர்கள் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்தார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்