உணவு பொருட்களை சிதறடித்த காட்டுயானைகளால் பரபரப்பு
ரேஷன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகள் உணவு பொருட்களை சிதறடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
ரேஷன் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகள் உணவு பொருட்களை சிதறடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுயானைகள்
வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளையும், டீக்கடைகளையும், சத்துணவு மையங்களையும், தொழிலாளர்களின் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21-ந் தேதியில் இருந்து வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்ததால் வனப்பகுதிகளை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் இருந்தன. எனினும் தற்போது மீண்டும் வெளியே வர தொடங்கி விட்டன.
அட்டகாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாய்முடி எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் ஏற்கனவே உடைத்த டீக்கடையையே மீண்டும் உடைத்து சேதப்படுத்தியது. நேற்று அதிகாலையில் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளிருந்த அரிசியை எடுத்து சாப்பிட்டு விட்டு சர்க்கரை, பருப்பு போன்றவற்றை சிதறடித்து அட்டகாசம் செய்தன.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்டேன்மோர் குடியிருப்பு பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் கூச்சலிட்டு யானைகளை விரட்டினர். எனினும் நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்த யானைகளை வனத்துறையினர் வந்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.