தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

திருவாரூர் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-28 18:45 GMT

திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெய்பேர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தென்னவராயன்நல்லூர் மதகடி தெரு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதகடி தெருவில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 60) என்பவர், தனக்கு சொந்தமான இந்த இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கூடாது என கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது அவர் திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது உயர்கோபுர மின்விளக்கு அமைய உள்ள இடம் அரசு புறம்போக்கு இடம் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்த நடராஜன், இது எனக்கு சொந்தமான இடம், அதற்கான பட்டா இருக்கிறது என போலீசாரிடம் தெரிவித்தார்.

பரபரப்பு

இதனையடுத்து அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அளந்த பின்னர் பணிகளை மேற்கொள்ளலாம் என கூறியதன் அடிப்படையில் அந்த பகுதியில் உயர் மின்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உயர்கோபுர மின்விளக்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்