மோட்டார் சைக்கிளில் சென்ற போதுகல்லூரி விரிவுரையாளர் தவறி விழுந்து பலி
சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கல்லூரி விரிவுரையாளர் தவறிவிழுந்து பலியானார்.
சேலம்,
கல்லூரி விரிவுரையாளர்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிகண்ணு. இவருடைய மகன் கிருஷ்ணன் (வயது 28). இவர் அரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.
இந்த நிலையில் அவருக்கு நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணி கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்று பணியில் சேருவதாக இருந்தது. இதற்காக அவர் நாமக்கல்லுக்கு நேற்று முன்தினம் இரவே வர முடிவு செய்தார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கிவிட்டு நேற்று காலையில் பணிக்கு செல்ல திட்டமிட்டார்.
அவர் தி்ட்டமிட்டப்படி நண்பர் வீட்டில் தங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து புறப்பட்டார். சேலம் அருகே மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள முதல் வளைவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சாவு
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.