கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி மீது வழக்கு

கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி மீது வழக்கு

Update: 2022-07-06 12:21 GMT

கோவை, ஜூலை

கோவையில் உணவு பார்சல் வினியோகம் செய்யும் ஊழியரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.7 லட்சம் கடன்

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் தனியார் உணவு பார்சல் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்த தொழில் செய்ய கடந்த 2019-ம் ஆண்டில் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

அந்த கடனுக்கு அவர் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவர் நடத்தி வந்த தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனுக்கான தவணைத்தொகையை திரும்ப செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

வட்டி கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் அந்த நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு தவணைத்தொகை மற்றும் அதற்கான வட்டியை உடனடியாக செலுத்தும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் தன்னிடம் கூடுதல் வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

அத்துடன் அவர் அளித்த புகாரில், நான் கடந்த 2019-ம் ஆண்டில் கடன் வாங்கினேன். அதில் இதுவரை ரூ.4 லட்சம் செலுத்திவிட்டேன். ஆனால் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டி மட்டும் செலுத்த வேண்டும் என்று நான் கடன் வாங்கிய நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தம்பதி மீது வழக்கு

இதையடுத்து அந்த நிதிநிறுவனத்தை சேர்ந்த செந்தில்குமார், அவருடைய மனைவி பிரியா ஆகியோர் மீது போலீசார் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்