மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கக்கோரி வழக்கு

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2022-10-20 20:12 GMT

திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் ஆணை, விளம்பரங்கள் மற்றும் செய்திக்குறிப்புகளில் மேற்படி திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். உதாரணமாக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்று தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது.

அதே போல் எல்.ஐ.சி. நிறுவனம் தமது பாலிசிகளுக்கு இந்தி பெயர்களைத்தான் வைக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு வைகை, பாண்டியன், பொதிகை, செந்தூர் எக்ஸ்பிரஸ் என தமிழில் பெயரிட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்தியோதயா, துரந்தோ, தேஜஸ், சுவிதா என இந்தி பெயர்களிலேயே தமிழகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

எனவே மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும், ரெயில்களுக்கும் இந்தி பெயர்களை பயன்படுத்தாமல் தமிழிலேயே பெயர்களை இயற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசு சார்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்