ராமநாதபுரம் கலெக்டரை கீழே தள்ளிவிட்ட நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-18 04:53 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு & இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கின் முழுவிவரம்:-

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தனர்.

அதை தொடர்ந்து சற்று நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார். தான் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கியது ஏன்? என்று கேட்டார். திடீரென அமைச்சருக்கும், எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் விஷ்ணு சந்திரன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். அந்த நேரத்தில் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், கலெக்டர் விஷ்ணு சந்திரனை எம்.பி.யின் ஆதரவாளர் ஒருவர் தள்ளிவிட்டார். இதனால் கலெக்டர் கீழே விழுந்தார்.

பின்னர் நிலைமையை கருத்தில் கொண்டு அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கலெக்டர் ஈடுபட்டார். இது குறித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமைச் செயலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் - எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்