பெருங்குடியில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது; முதியவர் பலி - 4 பேர் படுகாயம்

பெருங்குடியில் சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-25 07:31 GMT

சென்னை தரமணியைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது 70). இவருடைய மனைவி பொன்னம்மாள் (65). இவர்களுடைய மகன்கள் சிவசங்கர், வினித்.

வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக இவர்கள் 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். இவர்களுடன் கோதண்டனின் தங்கையும் உடன் வந்தார். காரை சிவசங்கர் ஓட்டினார்.பெருங்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து காரில் சிக்கி படுகாயடைந்தவர்களை மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் இருந்த கோதண்டனை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கோதண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூர் தேரடியைச் சேர்ந்தவர் பிரகாசம் (50). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் மணலி புதுநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (40), அகிலா (45) ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புதிதாக போடப்பட்ட வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக ஓட்டி வந்ததால், வந்த வேகத்தில் வேகத்தடையில் ஏறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் 2 பெண்களும் லேசான காயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவர் பிரகாசம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் எண்ணூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரம் என்பவரும் வேகத்தடையை கவனிக்காததால் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார். அவரும் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்