வறுமையில் வாடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் 2 மகள்களுடன் வறுமையில் வாடுவதாகவும், அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-13 20:00 GMT

பார்வையற்ற மாற்றுத்திறனாளி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த சிந்துபட்டி அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் பால்சாமி (வயது 49). பிறவியிலேயே பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி. அவருடைய மனைவி பெருமாயி (45). இந்த தம்பதிக்கு அன்னலட்சுமி (22), முத்துபெருமாயி (20) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இதில் அன்னலட்சுமி நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் முத்து பெருமாயி டெய்லரிங் பயிற்சி பெற்று வருகிறார். மனைவி பெருமாயி, வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மனைவியின் நோய், மகள்களின் படிப்புக்கு போதிய பணம் இன்றி பால்சாமியின் குடும்பம் வறுமையில் வாடி வருவதாக கூறப்படு கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேனா, பென்சில் ஆகியவற்றை பால்சாமி விற்று வந்தார். தற்போது இவர், சிறிய அளவிலான எடை எந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தி வரு கிறார். இவரிடம் எடை போடும் பெரியவர்கள் ரூ.5-ம், சிறியவர்கள் ரூ.2-ம் கொடுத்து செல்கின்றனர்.

மளிகை கடை வைக்க உதவி

மக்கள் அதிகமாக கூடுகிற ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், பள்ளி, கல்லூரிகள் முன்பு எடை எந்திரத்ேதாடு பால்சாமி நிற்பதை பார்க்கலாம். அதன்படி செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு எடை எந்திரத்துடன் பால்சாமி அமர்ந்திருந்தார். அவர் வைத்திருந்த எந்திரத்தில் எடை பார்த்து பொதுமக்கள் பணத்தை கொடுத்து சென்றனர்.

இதுகுறித்து பால்சாமி கூறுகையில், தமிழக அரசு எனக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கி வருகிறது. அரசு வழங்கிய இலவச பயண அட்டை மூலம் வெளியூர்களுக்கு சென்று எடை எந்திரத்தை பயன்படுத்தி வருகிறேன். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது. இந்த வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் என்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே எனக்கு பெட்டிக்கடை அல்லது மளிகை கடை வைப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்