நெசவுத்தறி கூடத்துக்குள் புகுந்த கருநாக பாம்பு
சின்னாளப்பட்டியில், நெசவுத்தறி கூடத்துக்குள் புகுந்த கருநாக பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி சன்மார்க்க சங்கம் தெருவில் வசிப்பவர் தண்டபாணி. நெசவாளரான இவர், தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து தறிக்கூடம் நடத்தி வருகிறார். அதில், அவர் சுங்குடி சேலை நெசவு செய்கிறார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் நெசவு செய்ய தறியை தண்டபாணி இயக்கினார். அப்போது, தறிக்குள் பாம்பு ஒன்று இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தறிக்கூடத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஆத்தூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தறிக்கூடத்துக்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது, 5 அடி நீள கொடிய விஷமுள்ள கருநாக பாம்பு என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். பிடிக்கப்பட்ட பாம்பு, வனப்பகுதியில் விடப்பட்டது.