வாய்க்கால் தூர்வாரியபோது 5 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

பொறையாறு அருகே வாய்க்கால் தூர்வாரிய போது ஓரே கல்லில் செதுக்கப்பட்ட 5 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-18 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே வாய்க்கால் தூர்வாரிய போது ஓரே கல்லில் செதுக்கப்பட்ட 5 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

5 அடி பெருமாள் சிலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள சிங்கமுனை வாய்க்கால் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மண்ணுக்கு அடியில் கற்சிலை ஒன்று புதைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலை இருந்த பகுதியை கவனமாக தோண்டி அதை வெளியே எடுத்தனர். இதில் 5 அடி உயரமுள்ள வலது கையில் சக்கரம், இடது கையில் சங்குடன் கூடிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பழமையான பெருமாள் சாமி சிலை இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாமி சிலையை கரையில் எடுத்து வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

எந்த காலத்தை சேர்ந்தது?

இச்சம்பவம் தொடர்பாக நெடுவாசல் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தனபால் கொடுத்த தகவலின் பேரில் தரங்கம்பாடிதாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் கண்ணதாசன், கிராம நிர்வாக அலுவலர் சவுரிராஜன் ஆகியோருடன் நேரில் சென்று பழமையான பெருமாள் சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் சிலையை மீட்டு பொரறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் எடுத்து சென்று அங்கு பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது? என்பது குறித்து தரங்கம்பாடி தொல்லியல் துறை காப்பாட்சியர் ஆய்வு செய்த பிறகு தான் தெரிய வரும் என்று தாசில்தார் கூறினார். பழமையான பெருமாள் சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்