ஆசிரியையிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

பள்ளி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-23 18:28 GMT

கீரமங்கலம்:

ஆசிரியை

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி மேரி (வயது 35). இவர், புளிச்சங்காடு கைகாட்டியில் தங்கி இருந்து கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கமாக கைகாட்டியிலிருந்து தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று மாலையில் திரும்பி வருகிறார். அதே போல இன்று மாலை பள்ளி நேரம் முடிந்து தனது ஸ்கூட்டரில் ஆசிரியை மேரி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

தங்க சங்கிலி பறிப்பு

கரம்பக்காடு பிரிவு ரோட்டுக்கு முன்னதாக ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் ஆசிரியை மேரி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். கழுத்தில் கிடந்த 2 தங்க சங்கிலிகளில் ஒரு சங்கிலியை பிடித்துக் கொண்ட போது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்துள்ளது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை மறித்து நிறுத்த முயன்ற போது தலையில் வைத்திருந்த ஒரு தொப்பியை வீசிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக மேரி கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை நேரத்தில் அதிகமான போக்குவரத்து உள்ள ரோட்டில் ஆசிரியை கழுத்திலிருந்து தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்