20 பேர் கொண்ட மருத்துவக்குழு நேரில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் அருகே 6 பேர் மர்மமான முறையில் இறந்த கிராமத்தில் 20 பேர் கொண்ட மருத்துவக்குழு ஆய்வு செய்தது. அங்கு குடிநீரை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் ஆணையன் காலனி உள்ளது. இப்பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் அடுத்தடுத்து 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பீதியடைந்த காலனி மக்கள், வீடுதோறும் தலா ரூ.200 வீதம் வசூல் செய்து, கடந்த 21-ந் தேதி சுடுகாட்டில் கொடும்பாவியை எரித்து சேவலை பலியிட்டனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மருத்துவக்குழு ஆய்வு

இது பற்றி அறிந்ததும் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவர் கஜபதி தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆணையன் காலனிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் மர்மமான முறையில் இறந்த 6 பேரின் முழு விவரத்தையும் கேட்டறிந்தனர். அவர்களுடைய மருத்துவ குறிப்புகளையும் வாங்கி பார்த்தனர். அதன் பிறகு அப்பகுதியின் சுற்றுப்புற சூழலை பரிசோதித்த மருத்துவ குழுவினர், 3 கேன்களில் குடிநீரை சேகரித்தனர். பின்னர் அதனை ஆய்வுக்காக சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இது குறித்து மருத்துவக்குழுவினர் கூறுகையில், 6 பேர் மர்மமான இறந்தது தொடர்பாக நேரில் வந்து ஆய்வு செய்து விசாரித்தோம். அதில் 3 பேர் சர்க்கரை வியாதியாலும், ஒருவர் மிதமான மாரடைப்பாலும், மற்றொருவர் விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவாலும் மரணம் அடைந்துள்ளனர். இருப்பினும் இங்குள்ள குடிநீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்