9-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
நெல்லையில் பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
9-ம் வகுப்பு மாணவர்
நெல்லை பெருமாள்புரம் அருகே ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மகன்கள் முத்துக்குட்டி (வயது 16), அரிராமகிருஷ்ணன் (15).
முத்துக்குட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், அரிராமகிருஷ்ணன் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். அரிராமகிருஷ்ணன் பள்ளிக்கு சரிவர செல்லாமல் வீட்டில் செல்போனில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
விஷம் குடித்தார்
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அரிராமகிருஷ்ணனை பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினமும் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் தந்தை மாரியப்பன் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அரிராமகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தான். மாலையில் வீட்டுக்கு வந்த முத்துக்குட்டி தனது தம்பி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
பரிதாப சாவு
உடனே, அரிராமகிருஷ்ணனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.