955 கிராமங்களுக்கு ரூ.2,230 கோடியில் சுகாதாரமான குடிநீர்

விழுப்புரம் மாவட்டத்தில் 955 கிராமங்களுக்கு ரூ.2,230 கோடி மதிப்பில் சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

Update: 2022-11-10 18:45 GMT

விழுப்புரம்

சுகாதார குழுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.2,230 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாவட்ட அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாக காவேரி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு மேட்டூர் செக்கானூரில் இருந்து ரூ.2 ஆயிரத்து 230 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

955 கிராமங்களுக்கு குடிநீர்

இதன் மூலம் விழுப்புரம், திண்டினம் ஆகிய நகராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தரவும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளுக்குட்பட்ட 229 குடியிருப்பு பகுதிகளுக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளுக்குட்பட்ட 256 குடியிருப்பு பகுதிகளுக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 ஊராட்சிகளுக்குட்பட்ட 226 குடியிருப்பு பகுதிகளுக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்குட்பட்ட 44 குடியிருப்பு பகுதிகளுக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளுக்குட்பட்ட 106 குடியிருப்பு பகுதிகளுக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 49 ஊராட்சிகளுக்குட்பட்ட 94 குடியிருப்பு பகுதிகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 1 பேரூராட்சி மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 955 கிராமங்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.2,230 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப்பின் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்(ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் அன்பழகன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பொன்னம்பலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்