சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-08-03 00:19 GMT

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1687-1692-ம் ஆண்டு் காலகட்டத்தில், சென்னை கோட்டை கொத்தளத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. சுதந்திர தினத்தன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றலாம் என்ற உரிமை 1974-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தீவிர முயற்சியால் பெறப்பட்டது.

இந்த தேசிய கொடி மரக்கம்பம் பழுதடைந்ததால் 1994-ம் ஆண்டில் 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் எல் அண்ட் டி நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது.

நடைபெற உள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய கொடி கம்பத்தை புதுப்பிக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் மேனகா, செயற்பொறியாளர் குழந்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி வருமாறு:-

ஆகஸ்டு 15-ந் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் கொடியேற்ற உள்ளார். தேசிய கொடிமரத்தை புதுப்பித்தல் பணி ரூ.45 லட்சம் மதிப்பீட்டிலும், கொடிமர நடைமேடை மற்றும் பிணைகயிறு புதுப்பித்தல் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், கோட்டை கொத்தளத்தின் கூரை மராமத்துப்பணி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள கொடிகம்பத்தை ஆய்வு செய்தபோது அது துருப்பிடித்திருந்ததாக காணப்பட்டது. கடற்கரை பகுதியில் வீசும் உப்பு காற்றினால் பெயிண்ட் உரிந்துவிட்டது. எனவே அந்த கொடிக் கம்பத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் புதுப்பிக்கும் பணி நிறைவடையும். மிக உயர்ந்த கம்பம் என்பதால் ஐ.ஐ.டி. ஆலோசனையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய அரசின் குழு உள்ளது. அந்த குழுவிடம் இருந்து தடையற்ற சான்றிதழ்களை அரசு பெற்றுள்ளது. மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது. பேனா நினைவு சின்னத்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

2-ம் கட்ட பணிதான், கடலில் பேனா நினைவு சின்னத்தை நிறுவுவதாகும். அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்துவிட்டதால், முதல் கட்ட பணிகள் முடிந்த பிறகு முதல்-அமைச்சரிடம் துறை சார்பில் கலந்து பேசுவோம். அதுபற்றி முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் கட்டுமான பணியில் 90 சதவீத பணி நிறைவடைந்துள்ளது.

அந்த நினைவிடத்தை எப்போது திறப்பது? என்பது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்