32 வழக்குகளில் ரூ.90 லட்சம் இழப்பீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.90 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-24 18:17 GMT

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.90 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பணிகள்

தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் நிவாரணம் இழப்பீடு வழங்கும் திட்டத்தின்கீழ் சம்பவங்களின்போது பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க கோர்ட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மேற்கண்ட திட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், கொலை செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் ரீதியான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வறுமை மற்றும் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டு கால கட்டத்தில் இதுவரை 32 வழக்குகளில் ரூ.90 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அரசுக்கு பரிந்துரை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு

இந்த திட்டத்தின் கீழ் இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வறுமை மற்றும் ஏழ்மை நிலையில் இருந்தால் உரிய இழப்பீடு பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். அவர்களின் மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தெரிவித்துள்ளார். அப்போது சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்