கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ்

Update: 2023-05-21 18:45 GMT

விக்கிரவாண்டி

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி கள்ளச்சாராயம் குடித்து மயங்கிய 60 பேர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 14 பேர் இறந்தனர். மீதமுள்ளவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொதுவார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் மரக்காணம் மற்றும் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பாலு(வயது 43), மரிதாஸ்(47), வினாயகம்(38), ராமு(45), மணிமாறன்(48), தேசிங்கு(42), ராஜதுரை(27), சிவா(55), ஆறுமுகம்(50) ஆகிய 9 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் ஆஸ்பத்தியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வேன் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், கல்லூரி டீன் கீதாஞ்சலி, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலர், ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், உதவி மருத்துவ அலுவலர், வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

தற்பொழுது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர், பொது வார்டில் 13 பேர் என மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்