பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பலி
பாம்பு கடித்து 8-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவரது மகன் முகமது ஹக்கீம் ஆதில் (வயது 14). இவன் பள்ளப்பட்டி உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். பந்தை எடுப்பதற்காக ஓடிச் சென்றபோது அப்பகுதியில் முட்செடியில் கிடந்த பாம்பு ஒன்று முகமது ஹக்கீம் ஆதிலை கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு முகமது ஹக்கீம் ஆதிலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.