77 ஆயிரத்து 181 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்
77 ஆயிரத்து 181 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்
திருவாரூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் என்னும் திட்டத்தில் 6 வயது வரையுள்ள 77 ஆயிரத்து 181 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு திட்டங்கள்
தமிழ்நாடு அரசானது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 6 வயது வரையுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் திட்டம்
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை அடைந்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிறப்பு முதல் 72 மாதம் வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 2022 ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அன்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
77,181 குழந்தைகள் பயன்
இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கெடுக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 6 மாதம் வரை 4753 குழந்தைகளும், 6 மாதம் முதல் 2 வயதுவரை 22,303 குழந்தைகளும், 2 வயது முதல் 3 வயதுவரை 12,260 குழந்தைகளும், 3 வயது முதல் 6 வயது வரை 37,865 குழந்தைகளும் என 77,181 குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.