நீரேற்று நிலையத்தில் ரூ.73 கோடியில் மேம்பாட்டு பணிகள்

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர்மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-10-10 21:42 GMT

தஞ்சாவூர்;

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள திருமானூர் நீரேற்று நிலையத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர்மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேம்பாட்டு பணிகள்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில், திருமானூர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, தஞ்சை மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் பொது மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நீரேற்று நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆய்வு

இந்த பணிகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுக்குப் பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான திருமானூர் நீரேற்று நிலையத்தில் தொடக்கத்தில் ஒரு நீர் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 23 எம்.எல்.டி. தண்ணீர் உறிஞ்சி குழாய் மூலம் தஞ்சைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதைத் தவிர தலா 18 எம்.எல்.டி. நீர் உறிஞ்சும் நிலையங்கள் இரண்டு அமைக்கப்பட்டு, இதன் பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெற உள்ளது.

தட்டுப்பாடு ஏற்படாது

இதுதவிர முன்பு இருக்கக் கூடிய 23 எம்.எல்.டி.யையும் சேர்த்தால், சுமார் 60 எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் தஞ்சை மாநகருக்கு வினியோகம் செய்ய இருக்கிறது. தஞ்சை மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. அப்படி இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி ஆகும். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது. இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம். இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்