சுற்றுலா சென்றிருந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (வயது 72). இவர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்.
இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகன் புவனேஸ்வரன். குமார் சுப்பிரமணியன், தனது மனைவி லட்சுமியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அவர்களுடைய மகன் புவனேஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் வேலை காரணமாக புவனேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு புனே புறப்பட்டு சென்றார். நேற்று அதிகாலை சுற்றுலா முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த குமார் சுப்பிரமணியன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 70 பவுன் நகை, ஒரு லேப்டாப் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.