13 வயது முதல் 20 வரை கல்லூரி மாணவிக்கு 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - போலீஸ் எஸ்.ஐ சிக்கியது எப்படி...?
சப்-இன்ஸ்பெக்டரின் தொல்லை தாங்க முடியாத காதலி, தனது மகளுடன் சேர்ந்து சென்னை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.;
சென்னை
சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ் (வயது 50). இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். அந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது வீட்டில் இருந்த காதலியின் 13 வயது மகள் மீதும் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ், தனது காதலி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார்.
சுமார் 7 ஆண்டுகளாக அதுபோல் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தார்.தற்போது அந்த சிறுமிக்கு 20 வயது ஆகிறது. அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் தனது தாய் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இளம்பெண்ணுக்கு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பாலியல் தொந்தரவு செய்து வந்தார்.
சப்-இன்ஸ்பெக்டரின் தொல்லை தாங்க முடியாத காதலி, தனது மகளுடன் சேர்ந்து சென்னை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் அந்த இளம்பெண், சிறுமியாக இருக்கும்போதே அவரை மிரட்டி பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும், தற்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆனபோதும் பாலியல் தொல்லை கொடுத்ததும் உறுதியானது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.