ஓடும் பஸ்சில் பக்தர்களிடம் ஜேப்படி; 7 பெண்கள் அதிரடி கைது

நெல்லையில் தேரோட்டத்துக்கு வந்தபோது ஓடும் பஸ்சில் பக்தர்களிடம் ஜேப்படி செய்த 7 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-03 20:08 GMT

நெல்லையில் தேரோட்டத்துக்கு வந்தபோது ஓடும் பஸ்சில் பக்தர்களிடம் ஜேப்படி செய்த 7 பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஓட்டல் ஊழியர்

நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லைக்கு படையெடுத்தனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாநகர போலீஸ் சார்பில் ஆங்காங்கே பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் ெநல்லை சந்திப்பு பகுதியில் ஓட்டல் ஊழியராக வேலை பார்த்து வரும் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 56) என்பவர் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து டவுனுக்கு பஸ்சில் ஏறினார்.

ஜேப்படி

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் ஒருவர், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மந்திரமூர்த்தியின் சட்டைப்பையில் வைத்திருந்த மணிப்பர்சை ஜேப்படி செய்தார். இதனை பார்த்ததும் பஸ்சில் இருந்த சக பயணிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

அவருடன் வந்த மேலும் 3 பெண்களையும் பிடித்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், 4 பேரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

4 பெண்கள் கைது

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணாராஜபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி ஆஷா (37), பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த ஆனந்த மனைவி திவ்யா (40), சுரேஷ் மனைவி சுசிலா (47), நஞ்சப்பன் மகள் லட்சுமி (20) ஆகியோர் என்பதும், அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் 3 பேர் சிக்கினர்

அதேபோல் உடையார்பட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (64) என்பவர் மற்றொரு பஸ்சில் நெல்லை சந்திப்பில் இருந்து தேரோட்டத்தில் பங்கேற்க டவுனுக்கு சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆறுமுகத்திடம் பெண் ஒருவர் ஜேப்படி செய்ய முயன்றார்.

இதனை அறிந்த அவர் சுதாரித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்ணையும், அவருடன் வந்த மற்ற 2 பெண்களையும் பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி முத்துமாரி (54), சிவா மனைவி ஜெயந்தி (25), ராஜூ மனைவி விஜயலட்சுமி (41) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் விசாரணை

இவர்கள் 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானது தெரியவந்தது.

தொடர்ந்து இவர்கள் வேறு சம்பவங்களில் ஈடுபட்டனரா? எனவும், இவர்களுடன் வேறு யாராவது வந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் ஓடும் பஸ்சில் பக்தர்களிடம் துணிச்சலாக ஜேப்படி செய்த 7 பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்