நீலகிரி வனப்பகுதியில் புதிதாக 7 புலிகள் கண்டுபிடிப்பு

நீலகிரி வனப்பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தாய்புலி நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கணக்கெடுப்பில் வராத 7 புதிய புலிகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-04 19:30 GMT


நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புலிகள் மற்றும் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதேபோல் இந்திய அளவில் புலிகள் அடர்த்தி அதிகமாக உள்ள 3-வது இடமாக முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.

இதேபோல் இந்த வனப்பகுதியில் அரிய வகையை சேர்ந்த பல்வேறு தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வன சரகத்தில் 2 புலி குட்டிகள், 18-ந்தேதி நடுவட்டம் பகுதியில் ஒரு புலி, ஆகஸ்ட் 30-ந்தேதி கார்குடி பகுதியில் ஒரு புலி, செப்டம்பர் 9-ந்தேதி எமரால்டு பகுதியில் 2 புலிகள், சின்ன குன்னூர் பகுதியில் 4 புலிக் குட்டிகள் இறந்தன. இதில் சின்ன குன்னூர் மற்றும் சீகூர் பகுதியில் இறந்த புலி குட்டிகளின், தாய் புலியின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புலிகள் உயிரிழப்பு குறித்து, உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் புலிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து நேரில் விசாரிக்க டேராடூனில் இருந்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் கடந்த வாரம் வந்து சென்றனர்.

அப்போது வனத்துறையிடம் புலிகள் இறப்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

பொதுவாக வனப்பகுதியை பொருத்தவரை 40 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி வாழ்ந்து வரும். ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் 10 முதல் 15 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி வாழ்ந்து வருகிறது. இதேபோல் புள்ளிகள் நடமாட்டம் குறித்து அறிய நீலகிரி மற்றும் முதுமலை வனப்பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் பதிவாகாத 7 புலிகள் பதிவாகியுள்ளன.

இதில் 3 பெண் புலிகளாகும். இந்த புலிகளின் எச்சம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஐதராபாத் மற்றும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு விவரங்கள் தெரிவதற்கு 45 நாட்கள் ஆகும். மேலும் தாய் புலி நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் 8 புலி குட்டிகள் இறந்துள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மராட்டிய மாநிலம் மற்றும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நீலகிரியில் நமது மாநில விலங்கான வரையாடுகள் தினம் புதிதாக கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்