பொய் வழக்கால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயற்சி...

போலீசார் தகுந்த அறிவுரை வழங்கினர். மேலும் அவர்களை விசாரணைக்காக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் அனுப்பி வைத்தனர்.;

Update:2023-05-25 15:33 IST

விழுப்புரம்:

செஞ்சி அருகே களையூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). இவர் இன்று காலை தனது தாய், மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் என 6 பேருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்த அவர்கள் 7 பேரும் திடீரென, கையில் வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் 7 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த விஷ பாட்டிலை கைப்பற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ராமச்சந்திரன் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில தவறான நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சாராய தொழிலில் ஈடுபட்டேன்.

என்னை தடுப்புக்காவல் சட்டத்தில் திருவண்ணாமலை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எனது மனைவி, பிள்ளைகள் என்னிடம் வந்து, இனிமேல் சாராய தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு நடந்துகொண்டால் நாங்கள் அனைவரும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் என்றும், திருந்தி வாழுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சாராய தொழிலை முற்றிலும் கைவிட்டு குடும்பத்திற்கு பாதுகாப்பாக வாழ நினைத்து செயல்பட்டு வருகிறேன். தற்போது சென்னையில் இருக்கும் என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்டேன், நிலுவையில் உள்ள வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி முடித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன்.

இருப்பினும் போலீசார் மீண்டும் என் மீது பொய்வழக்கு பதிவு செய்து தொந்தரவு செய்கிறார்கள். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களுக்கு போலீசார் தகுந்த அறிவுரை வழங்கினர். மேலும் அவர்களை விசாரணைக்காக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்