திருட்டுப்போன 64 செல்போன்கள் மீட்பு

நெல்லையில் திருட்டுப்போன 64 செல்போன்களை மீட்ட போலீசார் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-06-03 19:02 GMT

நெல்லையில் திருட்டுப்போன 64 செல்போன்களை மீட்ட போலீசார் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லை மாநகர பகுதியில் தொடர் வழிப்பறி, செல்போன் பறிப்பு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோன்று திருட்டுபோன செல்போன்களை மீட்பதற்காக சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் ஆவுடையப்பன் ஆகியோர் மேற்பார்வையில், மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யாலட்சுமி, கலை சந்தனமாரி, முத்துக்குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

64 செல்போன்கள் மீட்பு

இதுதொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், திருட்டுபோன ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 64 செல்போன்களை போலீசார் மீட்டு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்தனர். அவற்றை துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று வேலை வாங்கி தருவதாகவும், பரிசு வழங்குவதாகவும், தகவல், செயலி போன்றவற்றை அப்டேட் செய்வதாகவும் கூறி, குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண் அனுப்பி பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஏமாற்றியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 999-ஐ வங்கிகள் மூலமாக திரும்ப பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையதளம் மூலமாக பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களில் நடவடிக்கை எடுத்து, 31 பேருக்கு மோசடி செய்யப்பட்ட தொகையான ரூ.2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 319-ஐ மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகளில் முடக்கி வைத்து உரியவர்களுக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெறுவதற்கு என்று குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்