திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.

Update: 2023-04-28 08:29 GMT

வேதகிரீஸ்வரர் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோவில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாயன்மார்கள் வீதியுலா

முக்கிய திருவிழாவாக 63 நாயன்மார்கள் வீதியுலா நேற்று நடைபெற்றது.63 நாயன்மார்களுக்கும் பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு 63 நாயன்மார்கள் பல்லக்கில் ஏழுந்தருளியவாறு விநாயகர் மற்றும் வேதகிரீஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினர்.

அவரை தொடர்ந்து திரிபுரசுந்தரி அம்மன், முருகன், வள்ளி, தெய்வணை, சண்டிகேஸ்வரார் ஆகியோர் எழுந்தருளி வடக்கு கோபுர வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

வடக்கு கோபுர வாசலில் சாமிக்கு திபராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களை எழுப்பியவாறு கோபுர தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கம்மாளர் வீதி, அக்ரஹார வீதி வழியாக மலையடிவாரம் வந்து வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இதில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர். பக்தர்கள் வழி நெடுகிலும் பஞ்சமூர்த்திகளுக்கு தேங்காய் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டியும் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்