6,200 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்
வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத 6,200 பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டது. தகுதியுடைய பெண்கள் பலர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களின் சந்தேகம் மற்றும் தகவல்கள் அளிக்கும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம், 2 உதவி கலெக்டர் அலுவலகங்கள், 6 தாலுகா அலுவலகங்களில் உதவிமையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படாத பெண்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்து மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
6,200 பேர் மேல்முறையீடு
அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத பெண்கள் உதவிமையங்களுக்கு சென்று தங்களின் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்து வருகின்றனர். உதவிமையத்தில் தெரிவிக்கப்படும் பதிலில் திருப்தி அடையாதவர்கள் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 உதவி மையங்களில் இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை குறித்து 6 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கேட்டறிந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.
ஆண்டிற்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தியதால் இந்த திட்டத்தில் பலர் பயன்பெறவில்லை. மாவட்டம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத 6,200 பேர் அரசு, தனியார் இ-சேவை மையங்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.