நகைக்கடையின் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகள் கொள்ளை

மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-07-26 16:33 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

நகைக்கடை

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ செல்வின் ராஜ் (வயது 54). இவர் மார்த்தாண்டம் சி.‌எஸ்.ஐ. வணிகவளாகத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். தினமும் காலையில் நகைக்கடையை திறந்து வியாபாரம் செய்வது வழக்கம். பின்னர் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடைக்குள் வியாபாரத்திற்குரிய நகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஷட்டர் லேசாக திறந்து இருந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ளே இருந்த நகைகள் கொள்ளை அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.

62 பவுன் நகைகள் கொள்ளை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசெல்வின் ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் 62 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளை நடந்த கடைக்கு தடயவியல் துறையினர் வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் நகை கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதி அருகே மெயின் ரோட்டில் அமைந்துள்ள நகை கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்