601 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 601 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப் பட்டன.அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜை கள் நடந்தன.

Update: 2022-08-31 15:16 GMT

கூடலூர், 

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 601 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப் பட்டன.அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜை கள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் விநாயகா் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவமூர்த்தி எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

முன்னதாக மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தர் வயல், மைக்காமவுண்ட், சளி வயல், ஓவேலி சாலை, நந்தட்டி, நாடுகாணி விநாயகர் உள்பட அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டி இரட்டை பிள்ளையார் கோவிலில் கடந்த 23-ந் தேதி முதல் கணபதி ஹோமம், பூச்சொரிதல், தீபாராதனை, 108 கலச அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.

நேற்று அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 3 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் சங்கீதா, ஆய்வாளர் ஹேமலதா, தக்கார் கைலாசமூர்த்தி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

திரளான பக்தர்கள்

கோடப்பமந்து ஆனந்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், டேவிஸ் டேல் பஞ்சமுக விநாயகர் கோவில், லோயர் பஜார் விட்டோபா கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோத்தகிரி டானிங்டன் மகா சக்தி கணபதி கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7.15 மணிக்கு அபிஷேக பூஜை, 9.15 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கணபதி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

601 சிலைகள் பிரதிஷ்டை

ஊட்டியில் பாம்பே கேசில், காந்தல், ஐந்து லாந்தர், கோடப்பமந்து உள்பட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இந்து முன்னணி சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள 183 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 601 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் தரிசனம் செய்தும், பல்வேறு விநாயகர்களை புகைப்படம் எடுத்தும் சென்றனர். இந்த சிலைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தலூர்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று பந்தலூர் தாலுகாவில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பந்தலூர் முருகன் கோவில், சேரம்பாடி விநாயகர் கோவில், எருமாடு சிவன் கோவில் மற்றும் அய்யன்கொல்லி, அத்திசால், பாதிரிமூலா விநாயகர் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்