ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில்:
அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார், வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்கள் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை அதிகாரிகள் நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அதிகாரிகள் விரட்டி வருவதை கண்டு டிரைவர் கீழபுத்தேரி பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் அன்னாசி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவற்றை அகற்றி விட்டு பார்த்தபோது, சிறு சிறு மூடைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனிலும், ஆட்டோ அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலக வளாகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.