பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி சிக்கியது

பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி சிக்கியது.

Update: 2023-01-29 20:29 GMT

ரேஷன் அரிசி பதுக்கல்

மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கவும் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருச்சி சரகத்தில் பல இடங்களில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு வரகனேரி விரிவாக்க பகுதியில் தனரத்தினம் நகரில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது அங்குள்ள காலியிடத்தில் 10 வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்கு பைகள் மற்றும் கார், சரக்கு வாகனம் என மொத்தம் 6 வாகனங்கள் இருந்தன. அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அவற்றில் தலா 50 கிலோ வீதம் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த வாகனங்களை சோதனை செய்தபோது, ஒவ்வொரு வாகனத்திலும் தலா 1 டன் வீதம் 5 டன் ரேஷன் அரிசியும், ஒரு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசியும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. இதுபற்றி விசாரணை நடத்தியபோது, திருச்சி பூக்கொல்லை பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் மற்றும் அவருடைய கூட்டாளிகள், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கடத்திச்செல்வதற்காக அங்கு மொத்தமாக பதுக்கி வைத்து இருந்தது, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மொத்தம் 6 டன் ரேஷன் அரிசியையும், 6 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுபற்றி திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஷேக்மைதீன் மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்