சிறைவாசிகளின் குடும்பத்திற்கு மாதம் ரூ.6 ஆயிரம் அனுப்பப்படுகிறது -அமைச்சர் ரகுபதி பேட்டி

சிறைச் சந்தை பொருட்கள் விற்பனை மூலம் சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் அனுப்பப்படுவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Update: 2023-06-23 18:42 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில், சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி, சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக சிறைச் சந்தையை நேற்று திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, சிறைத்துறை பணியாளர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார். மேலும், சிறைத்துறை சார்ந்த 'சிறகிதழ்' என்ற மாத இதழை அமைச்சர் ரகுபதி வெளியிட சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் ஆர்.கனகராஜ், ஏ.முருகேசன் ஆகியோர் உள்பட சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை சுங்குடிச் சேலை

சிறைச் சந்தையை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய சிறைச்சாலையில் தயாரிக்கப்படுகிற பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் மற்றும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன். சிறைத் துறையில் செய்யப்படும் இந்த பொருட்கள் மூலமாக சிறையில் இருக்க கூடிய கைதிகளின் குடும்பத்திற்கு உதவும் வகையில் இதை செய்து வருகிறோம். இதில் தரமான சிறந்த பொருட்கள் அனைவருக்கும் தர ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு வரவேற்பு இருக்கிறது. அது குறித்து ஆலோசனை செய்து மக்களுக்கு ஆன்லைன் மூலமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறைவாசிகளின் மூலமாக தான் இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக உலக புகழ் பெற்ற மதுரை சுங்குடிச் சேலைகள் மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்படுகின்றன. ஆயத்த ஆடைகள் கோவை, மதுரையில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு உணவுப் பொருட்கள் திருச்சி, சேலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. புழல் மத்திய சிறையில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன.

மாதம் ரூ.6 ஆயிரம்

எல்லா சிறைச்சாலையிலும் இருக்கும் மரச்செக்குகள் மூலம் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன. வேலூரில் சுத்தமான தோலால் தரமான காலணிகள் தயாரிப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், சிறைச்சாலைகளில் உள்ள விவசாய நிலங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் மாதம் ரூ.6 ஆயிரம் சிறைவாசிகள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் நிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உருவாக்கி தந்துள்ளது.

அண்ணா பிறந்த நாளுக்கு 700 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 461 பேர் மேல் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற சிறை கைதிகள் குறித்த ஆவணங்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சில கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவை மறு பரிசீலனைக்கும் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள், அவர்களின் வழக்குகளை பொறுத்து விடுவிக்கப்படுகின்றனர். ஒரு சில வழக்குகளைத் தவிர பிற வழக்குகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் ஏராளமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைத் துறையில் 25 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரியும் சிறைக்காவலர்களுக்கு பணி உயர்வு குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்காலிக சந்தை

இந்த சிறைச் சந்தையில், போர்வை, லுங்கி, சேலை, சட்டை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள், ஷூ, பெல்ட் உள்ளிட்ட தோல் பொருட்கள், மரச்செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ராகி பிஸ்கட், கடலை மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள், இரும்பினாலான மாடாக் குழி, ஸ்டூல் போன்ற பொருட்கள், சணல் மற்றும் துணி பைகள், மஞ்சப்பை, இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது, இந்த சிறைச் சந்தைகள் எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகம் மற்றும் புழல், சைதாப்பேட்டை சிறைச்சாலைகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு அரசு அலுவலகம் வீதம் தற்காலிக சந்தையாகவும் இந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்